நல்லிணக்கம் தொடர்பான இலங்கை அரசின் செயற்திட்டம் ஒன்றை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்ரனிடம் கையளித்ததாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோறியா நூலன்ட் செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.
ஆயினும் அப்படியான செயற்திட்டம் எதையும் தான் ஹிலாரியிடம் கையளிக்கவே இல்லையென அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார். இருதலைவர்களும் இப்படி முரணான கருத்துக்களை வெளியிட்டமை செய்தியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனைத்துலக சமூகத்தின் கரிசனைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமெரிக்க அதிகாரிகளுக்கு, எமது குழு விரிவான முறையில் விளக்கமளித்துள்ளது. எவ்வாறாயினும் எந்த ஆவணமும் ஒப்படைக் கப்படவில்லை. செயற்திட்டம் தொடர்பான எந்த ஆவணத்தையும் நாம் அவர்களிடம் கையளிக்கவில்லை.
ஆனால் நாம் என்ன செய்தோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது குறித்தும், எதிர்காலப் பயணம் குறித்தும் அவர்களுக்கு விரிவாக விளக்கியுள்ளோம் என்றார் பீரிஸ். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இரு அரசியல் தலைவர்களுக்கும் இடையில் நேற்றுமுன் தினம் காலை இடம்பெற்ற இந்தச் சந்திப்புத் தொடர்பில் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நூலன்ட் நேற்று நண்பகல் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளித்த போது,
இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயற்திட்டம் மற்றும் அதனை பகிரங்கப்படுத்துவது குறித்த இலங்கையின் திட்டங்கள் அடங்கிய அறிக்கையைப் பீரிஸ் கையளித்தார்.
இதன்போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மட்டுமன்றி, உண்மையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பொதுவான செயற்பாடு அவசியம் என இராஜாங்கச் செயல்ர் வலியுறுத்தினார்.
அத்துடன், பொறுப்புக்கூறல் மற்றும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசு இலங்கைக்குள்ளும், சர்வதேச ரீதியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை விரைவாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
இத்தகைய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உறுதியான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை உங்கள் மக்களுக்கும், உலகுக்கும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் தற்போதுள்ளது.வடபகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கைப் படைத்தரப்பினரின் எண்ணிக்கையைக் குறைப்பது, வடக்கு மாகாண சபைக்கான தேர்தல், மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பொதுவான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் மீண்டும் அழுத்திக் கூறினார்.
என்றார் நூலன்ட். அதேவேளை, ஈரானிடம் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதைக் குறைப்பது தொடர்பிலான இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்என்றார் விக்டோரியா நூலன்ட்.
ஆயினும் ஹிலாரி கிளின்ரனிடம் தான் எந்தச் செயற்றிட்டத்தையும் கையளிக்கவில்லை என பீரிஸ் செய்தியாளர்களயிடம் தெரிவித்தமையால் செய்தியாளர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இரு தலைவர்களதும் கருத்துக்கள் இவ்வாறு முரணான வகையில் அமைந்தமை குறித்து அங்கு திரண்டிருந்த செய்தியாளர்கள் அதிர்ச்சி வெளியிட்டதுடன் பரபரப்பாகப் பேசிக்கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக