உலகப் பொருளாதார வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்பு ஆகியவற்றை லட்சியமாகக் கொண்டு உழைப்போம் என்று கேம்ப் டேவிட் என்ற இடத்தில் 2 நாள்கள் நடந்த ஜி-8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டில் முடிவு
செய்யப்பட்டது.
உலகப் பொருளாதார நிலைமையில் ஸ்திர நிலையைப் பராமரிக்கவும், அரசுகளின் வீண் செலவுகளைக் குறைக்கவும் கடன் சுமையில் ஆழ்ந்துவிட்ட கிரேக்க நாட்டின் துயர்களைத் துடைக்கவும் அனைத்து முயற்சிகளையும் விரைந்து எடுப்போம் என்றும் அவர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
G8 summit ends with pledges on Greece and growth par euronews-en
அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ரஷியா ஆகிய 8 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இதில் முக்கிய உரையாற்றினார். அவர் கூறுகையில், அரசின் செலவுகளைவிட வருவாய் பெருக வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை ஆயிரக்கணக்கில் பெருக்க வேண்டும்.
தொழில்துறையின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும்.அரசுகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படச்செய்யும் நடவடிக்கைகளில் அக்கறை செலுத்த வேண்டும். கிரேக்கம் உள்ளிட்ட 17 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் வலுப்பெற வேண்டும்.
அந்த நாடுகளின் பொதுச் செலாவணிக்கு ஏற்படும் சோதனைகளால் எல்லா நாடுகளுமே பாதிக்கப்படுகின்றன என்பதால் கூட்டு நடவடிக்கைகளைக் கவனமுடன் கையாள வேண்டும். பாரீஸ் நகரிலோ, மாட்ரிட்டிலோ ஒரு நிறுவனம் தன்னுடைய உற்பத்தியைக் குறைக்க நேர்ந்தால் பிட்ஸ்பர்க்கிலும் மில்வாக்கியிலும் வியாபாரம் குறையும்.
இந்தத் தொழிலில் ஈடுபடும் நகரங்களும் சமூகங்களும் வயிற்றில் ஈரத்துணியைப் போட வேண்டியிருக்கும். அமெரிக்க நாட்டுக்குள்ளேயே நிலவும் பொருளாதாரச் சவால்களைச் சந்திக்க நேர்ந்துள்ள அதே வேளையில் நம்முடைய நம்பிக்கைக்குரிய கூட்டாளியான ஐரோப்பிய யூனியனின் பிரச்னைக்கும் சேர்ந்தே தீர்வு காண வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
எதிர்காலத்துக்காக நம்முடைய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் நிரந்தரப்படுத்தவும் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்கும் அதே வேளையில் உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பெருக்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஜி-8 அமைப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் விவாதித்தோம். ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரப் பிரச்னைகள் மட்டும் அல்ல அரசியல் பிரச்னைகளும் நிலவுகின்றன.
பொருளாதார வளர்ச்சி மிகமிகக் குறைவாகவும் வேலையில்லாத் திண்டாட்டம் மிகமிக அதிகமாகவும் இருப்பதுதான் ஐரோப்பிய நாடுகளின் தலையாய பிரச்னை என்று தெரிவித்தார். பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனப்பட்டுள்ள ஐரோப்பியப் பொருளாதாரத்தை ஜேர்மனியின் பிரதமர் ஏஞ்செலா மார்கெல் கூறுவதைப் போல சிக்கன நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே மீட்டுவிட முடியாது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
எரிபொருள் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், ஈரானில் நிலவும் அரசியல் சூழல், ஆப்கானிஸ்தானிலும் வடகொரியாவிலும் காணப்படும் நிலவரம் ஆகியவை குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர். ஈரானுக்கு எதிராக கடுமையாக பொருளாதாரத் தடை விதித்தால் கச்சா பெட்ரோலிய எண்ணெய் சப்ளையில் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்ட கையிருப்பில் உள்ள எண்ணெயை சந்தைக்கு விற்பது குறித்தும் இத் தலைவர்கள் விவாதித்தனர்.
G8 summit ends with pledges on Greece and growth von euronews-en

0 கருத்துகள்:
கருத்துரையிடுக