டெல்லியில் ஐ.பி.எல். போட்டிக்கு பின்னர் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றின்போது, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைச் சேர்ந்த, ஆஸ்திரேலிய வீரர் லூக்போமர்ஸ்பச், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக, அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஜோஹல்
ஹமீது புகார் தெரிவித்தார்.
அந்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட லூக், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அவர் மீதான புகாரை திரும்ப பெறக்கோரி பெங்களூர் அணி வீரர்கள் சிலர் மிரட்டியதாக மேலும் ஒரு புகாரை ஜோஹல் ஹமீது தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே, பாலியல் வழக்கில் திடீர் திருப்பமாக அமெரிக்க பெண் ஜோஹல் கூறிய குற்றச்சாட்டை, லூக் போமர்ஸ்பச் ஒப்புக்கொண்டு உள்ளார்.
சம்பவம் நடைபெற்றபோது, தான் மதுபோதையில் இருந்ததாகவும், அந்த சமயத்தில் கவனக் குறைவாக அந்த பெண்ணை தொட்டு விட்டதாகவும் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இந்த தகவலை லூக் போமர்ஸ்பச்சோ, அல்லது அவருடைய வக்கீலோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இதே போன்று, தன்னை மிரட்டியதாக ஜோஹல் கூறிய குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக, கண்காணிப்பு கேமராவில் போமர்ஸ்பச்சுடன் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மற்றொரு வீரர் அப்பண்ணா இருக்கும் காட்சியும் போலீசுக்கு கிடைத்து உள்ளது. இவர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், கர்நாடக அணி சார்பாக விளையாடி வருகிறார்.
பாதிக்கப்பட்ட பெண் தங்கி இருந்த ஓட்டல் அறையின் அருகே, லூக் உடன் அப்பண்ணா இருப்பது போன்ற காட்சி கிடைத்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும், அந்த பெண் தங்கி இருந்த அறைக்குள் அப்பண்ணா சென்றாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், இதுதொடர்பாக அப்பண்ணாவிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து. விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரிகள்,
’’ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் சித்தார்த் மல்லையாவும், தொழில் அதிபர் சாஹில் பீர்ஜதாவும் நண்பர்கள். எனவே, டெல்லியில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு சாஹில் பீர்ஜதாவை, சித்தார்த் அழைத்திருக்கிறார். அதன்பேரில், சாஹில் தனது காதலி ஜோஹல் உடன் அந்த விருந்து நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அங்கே, சம்பவம் நடைபெற்றபோது, அமெரிக்க பெண் ஜோஹல் ஹமீது, அவருடைய காதலர் சாஹில் பீர்ஜதா, அவருடைய நண்பர்கள் மொயிஸ், மிராஜ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் லூக் போமர்ஸ்பச் ஆகிய 5 பேர் இருந்து உள்ளனர்.
அப்போது, அந்த பெண்ணிடம் போமர்ஸ்பச் தவறாக நடக்க முயன்று உள்ளார். அதை தடுக்க முயன்ற பெண்ணின் காதலர் சாஹிலை அவர் 3-4 தடவை முகத்தில் குத்தி உள்ளார். இதில் காயம் அடைந்த சாஹில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு மீண்டும் ஒரு தடவை அந்த பெண் தங்கி இருந்த அறைக்கு போமர்ஸ்பச் சென்றிருக்கிறார். அப்போது, அவருடன் பெங்களூர் அணியின் மற்றொரு வீரர் அப்பண்ணாவும் உடன் இருந்து உள்ளார்’’ என்று தெரிவித்தனர்
இந்த வழக்கு தொடர்பாக சாஹில் பீர்ஜதாவின் நண்பர் மொயிஸ் வாக்குமூலத்தையும் பதிவு செய்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக